பிஹெச்டி-க்கு இளங்கலை பட்டம் போதும்!

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (17:30 IST)
பட்டப் படிப்பு முடிந்தவர்கள் நேரடியாக முனைவர் ஆய்வுப் படிப்பில் (பி.ஹெச்.டி.) சேரும் வகையில் பல்கலைக் கழக விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

தற்போதுள்ள முறைப்படி முனைவர் ஆய்வுப் படிப்பில் சேருவதற்கு 7 ஆண்டுகள் படிப்பு முடித்திருக்க வேண்டும். அதாவது முதலில் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு, அதன் பிறகு 2 ஆண்டுகள் முதுகலை பட்டம், அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் எம்.பில். படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இத்தகைய விதிகளின் காரணமாக முனைவர் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதுகுறித்து ஆராய்வதற்கு பல்கலைக் கழக மானியக் குழுத் (யு.ஜி.சி.) தலைவர் சுகதேவ் தோரட் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் மத்திய அரசுக்கு அளித்தது. இதன்படி உலகத் தரம் வாய்ந்த 14 பல்கலைக் கழகங்களைத் தொடங்கலாம் என்று அரசுக்கு அது யோசனை தெரிவித்துள்ளது.

இப்பல்கலைக் கழகங்களில் 4 ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பைத் தொடங்கவும், இந்த இளங்கலைப் படிப்பை முடித்தவர்கள் நேரடியாக முனைவர் ஆய்வுப் படிப்பில் சேரும் வகையில் விதிகளை மாற்றவும் தோராட் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்