2. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (17:38 IST)
இந்த வங்கி 'வித்யா ஜோதித் திட்டம்' என்ற பெயரில் கல்விக் கடனை அளித்து வருகிறது. இதுபற்றி இங்கு பார்ப்போம்.

என்ன தகுதி வேண்டும்?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்விக் கடன் பெற விரும்புபவர்கள் முதலில் மாணவர்களாக இருப்பது அவசியம். மேலும், இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே இந்தக் கடன் அளிக்கப்படுகிறது.

நுழைவுத் தேர்வு அல்லது தகுதியின் அடிப்படையில் இந்தியாவிலோ, வெளிநாடுகளிலோ உள்ள கல்வி நிறுவனங்களின் சேர்க்கை அனுமதி அட்டையை, கடன் பெற விரும்பும் மாணவர்கள் வைத்திருக்க வேண்டும்.

எதற்கெல்லம் கடன் கிடைக்கும்?

மத்திய- மாநில அரசுகளால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இளங்கலை, முதுகலை, பட்டயப் படிப்பு, கணினி, தொழிற்கல்வி, வேளாண் கல்வி, சட்டம், பல் மருத்துவம், செவிலியர் படிப்பு, மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட கல்விகளுக்கு இந்த கடன் பொருந்தும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெறுவதற்கு மதிப்பெண் அட்டை, சேர்க்கைக்கான அனுமதிச் சீட்டு, முகவரி அத்தாட்சி, வருமானச் சான்று மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்கள் தேவைப்படுகின்றன.

உத்தரவாதம் தேவையா?

ரூ. 4 லட்சம் வரை உள்ள கடன் தொகைக்கு எவ்வித உத்தரவாதமும் தேவையில்லை. பெற்றோரின் உறுதிமொழி மட்டுமே போதுமானது. ரூ. 4 லட்சம் முதல் 7.50 லட்சம் வரை உள்ள கடனுக்கு பெற்றோரின் உத்தரவாதமும், மூன்றாம் நபரின் ஜாமீனும் தேவைப்படுகிறது.

ரூ. 7.50 லட்சத்திற்கு மேல் பெறப்படும் கடன் தொகைக்கு பெற்றோரின் உத்தரவாதத்துடன், சேமிப்புப் பத்திரங்கள், சொத்துப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களையும் உத்தரவாதமாக அளிக்க வேண்டும்.

கடன் தொகை, வட்டி எவ்வளவு?

இந்தியாவில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் என்றால் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனாகத் தருகிறது. வெளிநாட்டில் படிப்பதென்றால் இதன் வரம்பு ரூ. 20 லட்சம் ஆகும்.

ரூ. 4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 12.25 விழுக்காடு வட்டியும், ரூ. 4 லட்சம் அதற்கு மேற்பட்ட தொகைக்கு 13.50 விழுக்காடு வட்டியும் வசூலிக்கப்படுகிறது (இது அவ்வப்போது மாறலாம்).

இதில் ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு, மாணவர்கள் வங்கியில் முன் தொகை (மார்ஜின்) செலுத்தத் தேவையில்லை. கடன் தொகை ரூ. 4 லட்சத்துக்கும் மேற்பட்டதாக இருக்குமானால், இந்தியாவில் படிப்பதென்றால் 5 விழுக்காடும், வெளிநாட்டில் படிப்பதென்றால் 15 விழுக்காடும் முன்தொகையாகச் செலுத்த வேண்டும் (இது மாறுதலுக்குட்பட்டது).

திருப்பிச் செலுத்துவது எப்போது?

படிப்பு முடிந்த 6 முதல் 12 மாதங்களுக்கு பிறகு கல்விக் கடனை திருப்பிச் செலுத்தத் தொடங்கலாம். கடன் பெற்ற மாணவர்கள், சம அளவிலான மாதத் தவணைகளில் 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் கடனை செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் பெறுவது எப்படி?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளத்தில், எம்.எஸ்.வேர்ட் (M.S.Word) ஆவண வடிவிலான கடன் விண்ணப்பத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை அச்செடுத்து, பூர்த்தி செய்து உங்களுக்கு அருகாமையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாரை அணுகலாம். அல்லது அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெறலாம்.

(அடுத்ததாக... கனரா வங்கி)

வெப்துனியாவைப் படிக்கவும்