மத்திய அரசு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க ஆ‌க. 31 கடை‌சி நா‌‌ள்!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (12:35 IST)
சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கமத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற ஆகஸ்‌ட் 31ஆ‌ம் தே‌‌தி‌க்கு‌ள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ‌விருதுநக‌ர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " தமிழக அரசு, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ., ஐ.டி.சி. தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 11ஆ‌ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 6, 711 பேருக்கு நடப்பாண்டில் புதிதாக கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் தொடர்ந்து கல்வி பயிலும் பட்சத்தில் நிபந்தனைக்குட்பட்டு இந்த கல்வி உதவித் தொகையினை பெறலாம். முந்தைய ஆண்டு இறுதி தேர்வில் 50 ‌விழு‌க்காடு மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சிறுபான்மையினத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு வருகை, கல்வித்துறையின் வரையறைகளை பின்பற்றியிருக்க வேண்டும்.

கல்வி உதவித் தொகையில் சேர்க்கை, கற்பிப்புக் கட்டணம், படிக்கும் வகுப்புகளுக்கேற்ப ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். மேலும் விடுதி பராமரிப்பு கட்டணமாக மாதம் ரூ.235 முதல் ரூ.510 வரை வழங்கப்படும். விடுதியில் தங்கி பயிலாதவர்களுக்கு மாதம் ரூ.140 முதல் ரூ.330 வரை அதிகபட்சம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகையினை‌ப் பெற சாதிச்சான்று, பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த விவரங்களை ரூ.10 மதிப்புள்ள முத்திரை‌‌த்தாளில் சுய கையொப்பமிட்டு வழங்க வேண்டும். முந்தைய ஆண்டு இறுதி‌த் தேர்வு மதிப்பெண் பட்டியலை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனைத்து ஆவணங்களுடன் கல்வி நிறுவனங்களுக்கு புதுப்பித்தல் ஆகஸ்‌ட் 10ஆ‌ம் தேதி, புதியது ஆகஸ்‌ட் 31ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சரி பார்த்து மாணவ, மாணவிகளின் பட்டியலை வகுப்பு வாரியாக, பரிந்துரைக்கப்பட வேண்டிய படிவத்தில் மட்டும் பூர்த்தி செய்து, புதுப்பித்தலை வரு‌ம் ஆகஸ்‌ட் 20ஆ‌ம் தேதிக்குள்ளும், புதியதை செப்டம்பர் 10ஆ‌ம் தேதிக்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்