அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் 26ஆம் தேதி உண்ணாவிரதம்!
செவ்வாய், 22 ஜூலை 2008 (15:02 IST)
அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் அரசின் கொள்கை முடிவை திரும்பப் பெறக்கோரி வரும் 26ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதன் பொதுச்செயலாளர் கே.ஜி.பழனி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் முடிவு சட்டமன்ற ஆய்வுக்குழுவால் பொது விவாதத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால், அரசு கல்லூரிகள் மாற்றம் பொதுவிவாதத்திற்கு உட்படுத்தப்படவில்லை. அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் அரசின் கொள்கை முடிவை திரும்பப் பெறக்கோரி வரும் 26ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
சென்னை மாநில கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆசிரியர்கள் சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் எதிரிலும், கோவை அரசு கல்லூரி ஆசிரியர்கள் காந்திபுரம் பஸ் நிலையம் அருகிலும், கும்பகோணம் அரசு ஆண்கள், பெண்கள் கல்லூரி ஆசிரியர்கள் குடந்தை காந்தி பூங்கா அருகிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.