9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ. 500

புதன், 16 ஜூலை 2008 (12:30 IST)
சென்னை: மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ. 500 வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இத்தேர்வில் பங்கேற்பதற்கு 8-ஆம் வகுப்பில் 55 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது பள்ளி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.500 வீதம், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் 6,695 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்