பீகார் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு பயிற்சி மையம் சாதனை!
சனி, 31 மே 2008 (13:39 IST)
பீகாரில் சூப்பர்- 30 என்ற கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற அனைத்து 30 மாணவர்களும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனை வெள்ளியன்று அறிவித்த அந்த பயிற்சிக் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் குமார் இது குறித்து கூறுகையில், "இது எங்கள் கல்வி மையத்திற்கு மிகச் சிறந்த நாள், 100 சதவீத தேர்ச்சிக்காக கடந்த 4 ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டு வருகிறோம், இந்த ஆண்டில் அதனை சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் சூப்பர்- 30 பயிற்சி மையம் ஏழைக் குடும்பங்களிலிருந்து ஐ.ஐ.டி-யில் கல்வி பயில விரும்பும் 30 மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகளுடன் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்விற்கான பயிற்சிகளை அளித்து வருகிறது.
இந்த கல்வி மையத்தில் பௌதீக பாடம் நடத்தி வரும் பீகார் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் அபயானந்த் இது குறித்து தனது மகிழ்ச்சியை தெர்வித்துக் கூறுகையில், முதன் முதலாக இந்த 30 பேர்களில் சில சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.
கடந்த ஆண்டு வரை பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஐ.ஐ.டி. படிப்பிற்காக இங்கிருந்து தேர்ச்சி பெற்று சென்றுள்ளனர் என்று அவர் மேலும் கூறுகையில் தெரிவித்தார்.
இந்த கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் ஆனந்த் குமார் கணித மேதை ராமானுஜம் கணிதவியல் பள்ளி என்ற ஒரு கல்வி அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் 30 நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் அந்த பள்ளியிலிருந்து பெறப்படும் வருவாயில் நடத்தப்பட்டு வருகிறது.
சூப்பர்- 30 பயிற்சி மையம் 5 ஆண்டுகளுக்கு முன் உருவானது. 2003 ஆம் ஆண்டில் 18 ஏழை மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றனர். இந்த எண்ணிக்கை 2004-ம் ஆண்டு 22-ஆக அதிகரித்தது, 2005-ம் ஆண்டு 26 ஆக அதிகரித்து, தற்பொது 100 சதவீதம் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த சூப்பர்- 30 கல்வி மையம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை ஜப்பான் முன்னாள் அழகு ராணியும் நடிகையுமான நோரிகா ஃபியூஜிவாரா தயாரித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.