8 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணி 21ஆம் தேதி தொடங்குகிறது.
பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 47 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. தேர்வு முடிவு மே மாதம் 10ஆம் தேதிக்குள் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை செய்து வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு ஆகியவை கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதியும் மெட்ரிகுலேசன் தேர்வு 25ஆம் தேதியும் தொடங்கியது.
இந்த தேர்வுகளை 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பிளஸ்2 விடைத்தாள் போல 10ஆம் வகுப்பு விடைத்தாள்களையும் பாதுகாப்புடன் திருத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தலைமையில் 12ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
அடுத்து 21ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி தேர்வு விடைத்தாள்கள் திருத்தும்பணி நடைபெற உள்ளது.