அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 63 ஆசிரியர்களுக்கான நியமன ஆணையை வழங்கிய பிறகு, அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:
ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 190 இடங்களில், 143 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 312 காலியிடங்களில் 220 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதிமுள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
அகில இந்திய தொழில்நுட்ப குழு அனுமதித்ததை விட, பொறியில் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சில பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுவிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் இது போன்ற பிரச்சினை வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறினால் அகில இந்திய தொழில்நுட்ப குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
கல்லூரிகளில் உளவியல் மையம் அமைக்க கோரிக்கை:
கல்லூரிகளில் ஒரே முறையில் தேர்வு எழுதுவது பற்றிய ஆய்வு அறிக்கையை சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் அமைச்சர் பொன்முடியிடம் கொடுத்தனர்.
இதுகுறித்து தியாகராஜன் கூறியதாவது:
மூன்று மாதங்களாக பல்வேறு துறை நிபுணர்கள், ஆசிரியர்களிடம் கலந்து பேசி இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்வுமுறை மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடாது என்பதே இந்த அறிக்கையின் முக்கிய அம்சம்.
இதற்காக பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் உளவியல் மையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். தேர்வுமுறை மதிப்பெண் பெறுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு இருக்கக்கூடாது. தேர்வு நடைபெறுவதற்கு முன்பு தேர்வுத்தாள் எவ்வாறு அமையும் என்பதும், தேர்வு முடிந்த பிறகு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதும் பற்றி இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்பது உட்பட பல முக்கிய அம்சங்களை விளக்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.