தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு!
திங்கள், 25 பிப்ரவரி 2008 (16:22 IST)
இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) மாணவர் சேர்க்கையின் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வின் கீழ் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக மத்திய உயர்கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்குமாறு, மருத்துவச் சேவைகள் துறை தலைமை இயக்குநருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகவலை மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் சுமார் 310 தாழ்த்தப்பட்ட மாணவர்களும், 155 பழங்குடியின மாணவர்களும் இந்த ஆண்டு பயனடைவர்.
கடந்த ஆண்டு (2007) இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் 2,075 இடங்கள் மதிப்பெண்ணை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிரப்பப்பட்டன.
மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தாக்கல் செய்த விண்ணப்ப மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விடயத்தில் மத்திய அரசுதான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நிரப்பப்பட்டு வருகின்றன.
அதற்கு முன்பு, மதிப்பெண்ணை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.
இருந்தாலும், சில மாநிலங்களில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களை அந்தந்த மாநில அரசுகள் தத்தெடுத்து கொள்கை அடிப்படையில் தங்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை வழங்கி வந்தன.