11-வது திட்டக் காலத்தில் உயர் கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் : சுக்தேவ் தோரட்!
சனி, 16 பிப்ரவரி 2008 (19:47 IST)
பதினோராவது திட்டக் காலத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை தற்போதைய 10 விழுக்காடு என்ற நிலையில் இருந்து 15 விழுக்காடாக அதிகரிப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள ஒரு குழு நியமிக்கப்பட்டு உள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவவர் சுக்தேவ் தோரட் தெரிவித்துள்ளார்.
மங்களுர் பல்கலைக்கழக 26-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி, பதினொராவது திட்டக் காலத்தில் உயர் கல்வியில் புதிய வழிமுறைகளின் கீழ் எடுக்கப்பட உள்ள கொள்கை மற்றும் செயல் திட்டம் குறித்து விளக்கினார். பதினொராவது திட்டக் காலத்திற்கு உட்பட்ட 2008-12 ஆம் ஆண்டுகளில் இரண்டு அமர்வு முறையை பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்துவதன் மூலம் உயர் கல்வியில் அதிக மாணவர்களை சேர்க்கும் இலக்கை எட்டமுடியும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே கல்வித் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் சமுகத் தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு விரிவான நெறிமுறைகளை வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துஉள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகள் வருவதில் காலதாமதம் காரணமாக பாதிக்கப்படாத வண்ணம், பல்கலைக் கழகங்கள் பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்வதிலும், ஒரே மாதிரியான கால அட்டவணையை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
மத்திய பல்கலைக் கழகங்களில் நடைமுறைப்படுத்தபட வேண்டிய செயல் திட்டத்தை வகுக்கவும் சட்ட நெறிமுறைகளை வகுத்து தரவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் தலைமையில் குழு ஒன்றை நியமித்து உள்ளதாகவும் சுக்தேவ் தோரட் தெரிவித்துள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் எம்.வீரப்ப மொய்லி, பாட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுக்கோன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தையும் பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவவர் சுக்தேவ் தோரட் வழங்கினார்.