''பிளஸ்2 தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப்படும்'' என்று தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில், மார்ச் 3ஆம் தேதி பிளஸ்2 தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வில் பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமல்லாமல், பள்ளியில் அல்லாமல் தனியாக படித்து வரும் மாணவர்களும் (தனித்தேர்வர்கள்) தேர்வு எழுதும் மாணவர்களான தனித்தேர்வர்களும் உள்ளனர். இந்த தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
மாணவர்கள் விண்ணப்ப மனுவில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்திலோ அருகில் உள்ள தேர்வு மையங்களிலோ விநியோகிக்கப்படும். இதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவிப்பார்கள். ஹால் டிக்கெட்டை பெற்ற உடன் அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, எழுதும் பாடம், பதிவு எண், தேர்வு மையம் உள்பட அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் தவறு இருந்தால் சென்னையில் உள்ள அரசு தேர்வு இயக்குனரகத்தில் உள்ள கூடுதல் செயலாளரை நேரிலோ அல்லது தபாலிலோ அணுகவும்.
முறையாக உரிய காலத்தில் விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட் கிடைக்காத நிலையில் அவர்கள் விண்ணப்பித்ததற்கான தக்க ஆதாரங்களுடன் மேலே சொன்ன செயலாளரிடம் தொடர்பு கொள்ளலாம். செய்முறை தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக எழுத்து தேர்வும் எழுதவேண்டும். செய்முறை தேர்விலும் கலந்து கொள்ளவேண்டும். தேர்வர்கள் தாம் எழுதும் முதல் தேர்வு நாளன்று தமது வீட்டு முகவரி எழுதப்பட்ட ரூ.30-க்கு தபால் தலை ஒட்டப்பட்ட பெரிய அளவு உறை ஒன்றை தவறாமல் தேர்வு மையத்தில் ஒப்படைக்கவேண்டும். ஹால்டிக்கெட் தபாலில் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்று வசந்தி ஜீவானந்தம் கூறினார்.