கிழக்குப் பல்கலைக்கழக பேச்சில் தீர்வில்லை:புறக்கணிப்பு தொடர்கிறது
செவ்வாய், 25 மார்ச் 2014 (15:23 IST)
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதலின் எதிரொலியாக, வந்தாறுமூலை வளாகத்திலுள்ள பொலிஸ் காவல் நிலையம் அகற்றப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை முன் வைத்து தமிழ் மாணவர்கள் விரிவுரைகளைப் புறக்கணித்துள்ளார்கள்.
FILE
தமிழ் மாணவர்களின் போராட்டம் காரணமாக நாளைவரை பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வந்தாறுமூலை வளாக விடுதியில் கல்வி பயிலும் இரு மாணவ குழுக்களுக்கிடையிலான மோதலின் போது 10 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன் வைத்த போதிலும், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டு இரு சிங்கள மாணவர்கள் விரிவுரைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் குறித்த மாணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது வந்தாறுமூலை வளாகத்திலுள்ள பொலிஸ் காவல் நிலையத்திலிருந்த பொலிஸார் தமக்கு பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டதாக தமிழ் மாணவர்களால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
''இந்த மோதல் சம்பவத்துடன் தெடர்புடைய சகல மாணவர்கள் மீது விசாரனைகள் நடாத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பவத்தின்போது பொலிஸார் தமது கடமையை செய்ய தவறியதால் வளாகத்திலுள்ள பொலிஸ் காவல் நிலையம் அகற்றப்பட வேண்டும். சிங்கள மாணவர்களைப் போன்று சிரேஷ்ட தமிழ் மாணவர்களுக்கும் விடுதி வசதியளிக்கப்பட வேண்டும். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் சிங்கள மாணவர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.'' என்ற கோரிக்கைள் தமிழ் மாணவர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாணவர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக இன்று திங்கட்கிழமை மாலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவ பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ள போதிலும் மாணவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக முழுமையான தீர்வு எட்டப்பபடாத நிலையில் பகிஷ்கரிப்பு தொடரும் மாணவர்கள் மாணவ பிரதிநிதிகள் கூறுகின்றார்கள்.
பொலிஸ் காவல் நிலையம் தொடர்பான கோரிக்கையில் நடைமுறைச்சிக்கல்கள் இருந்தாலும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கக் கூடிய ஏனைய இரு கோரிக்கைகளையாவது தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என தாம் எதிர்பார்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இன்றைய சந்திப்பில் முழுமையான தீர்வைப் பெற முடியாவிட்டாலும், நாளை மாணவ பிரதிநிதிகளுடன் நிர்வாகம் தொடரவிருக்கும் சந்திப்பில் தீர்க்கமான முடிவுக்கு வர முடியம் என நம்புவதாக துணைவேந்தர் கலாநிதி கி. கோபிந்தராஜா நம்பிக்கை வெளியிட்டார்.