அனைத்து அகுதிகளுமே அற்புத பயன்தரும் அகத்தி கீரை !!
அகத்தி பூக்களை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் காபி, டீ அதிகம் குடிப்பதனால் ஏற்படும் பித்தம் ஆகியவற்றை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.
அகத்தி பூக்கள் 3 எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி பருகலாம். இந்த தேனீரை வாரம் ஒருமுறை குடித்துவர பித்தம் குறைந்து வெப்பம் தணியும்.
அகத்தியில் கால்சியம் அதிகளவில் உள்ளது. வைட்டமின் சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது. இரும்பு சத்து அதிகம் உள்ள அகத்தி, வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், தோல் பிரச்னை, பித்தத்தால் ஏற்படும் பிரச்னை ஆகியவற்றை போக்குகிறது. காய்ச்சலை தணிக்கிறது. உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும் தன்மை கொண்டது.
அகத்தி வேரை பயன்படுத்தி உடல், கை கால் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பிடி அளவு வேரை சுத்தப்படுத்தி எடுக்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர உள்ளங்கை, கால் எரிச்சல் மற்றும் உடலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். கண் எரிச்சல் குணமாகும். இதை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம்.
அகத்தியானது உடல் வெப்பத்தை சமப்படுத்தும் உன்னதமான உணவு. வயிற்று கிருமிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. பித்த சமனியாக விளங்குகிறது. அகத்தி கீரையை பயன்படுத்தி இளநரையை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
ஒரு பங்கு கீரை பசை, 2 பங்கு நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். சிறிது கிச்சிலி கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் பொடி கலவையை சேர்க்கவும். பின்னர், ஆற வைத்து வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். இதை வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு இருக்காது. இளநரை வராது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
அகத்தி கீரையை அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியம் ஏற்படும். இதை அளவுக்கு அதிமாக பயன்படுத்த கூடாது.