சபரிமலை நடை சாத்தப்பட்டது –காற்றில் பறந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு

செவ்வாய், 23 அக்டோபர் 2018 (09:42 IST)
ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை கோயில் நடை ஐந்து நாட்களுக்குப் பிறகு சாத்தப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 28 அன்று  தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் குழு ‘பெண்களுக்கு நீண்டகாலமாகவே பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள்தான். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல.  எனவே, அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு பலதரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் வந்தன.. சபரிமலை தேவஸ்தானம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ’தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை’ என சபரிமலை கோவில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கேரள அரசும் தீர்ப்புக்கு ஆதரவு அளித்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்தது.

அதனால் இந்து வலதுசாரி அமைப்புகளும், ஐய்யப்ப பக்தர்கள் சங்கமும் தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் பாஜக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியது. காங்கிரஸும் இந்த போராட்டங்களுக்கு பல இடங்களில் ஆதரவு தெரிவித்தது. இந்த போராட்டங்களுக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடையே எதிர்ப் பிரச்சாரம் செய்தது.
 

இதனிடையே ஐப்பசி மாத சிறப்பு வழிபாட்டிற்காக கடந்த 17-ந்தேதி மாலை 5 மணிக்கு ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து பல பெண்கள் ஐய்யப்பனை வழிபடும் ஆர்வத்தில் சபரி மலை நோக்கி வரத் தொடங்கினர். பெண்கள் கோயில் உள்ளே செல்வதைத் தடுக்க போராட்டக்காரர்கள் அனைவரும் சபரிமலை செல்லும் வழியான பம்பை மற்றும் நிலக்கல்லில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலைக்கு வரும் வாகனங்களை தடுத்து அதில் பெண் பக்தர்கள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்புதல், பெண் பக்தர்களில் காலில் விழுந்து அவர்களை திரும்பிப் போக சொல்லுதல், செய்தி சேகரிக்க வந்த பெண் பத்திரிக்கையாளர்களை தாக்குதல் போன்ற பல வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்டனர். இதனால் நடைதிறக்கும் நேரத்தில் போலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அடிதடி ஏற்பட்டது. போலிஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து முதல்நாள் வழிபாட்டின் போது பெண்கள் யாரும் உள்ளே செல்லவில்லை. கலவரம் நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கடுத்த நாட்களிலும் பென்பக்தர்கள் யாரும் வழிபடவில்லை. நடை சாற்றப்படும் கடைசி நாளான நேற்று பெண்கள் சிலர் வழிபாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பிந்து என்ற பெண் கோயிலுக்குள் செல்ல காவல்துறையின் பாதுகாப்பைக் கோரியிருந்தார். இதனால் போலிஸார் பிந்துவைப் பாதுகாப்பாக தங்கள் ஜீப்பில் சபரிமலைக்கு அழைத்து சென்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் பாதிவழியிலேயே ஜீப்பை மறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிந்து தனது திட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றார்.

இதனால் 5 நாட்கள் நடை திறந்திருந்தும் காவல்துறை மற்றும் ஆளும்கட்சியின் ஆதரவு இருந்தும் ஒரு பெண் பக்தரால் கூட கோயிலுக்குள் சென்று வழிபடமுடியாத மோசமான சூழல் உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்