இந்த வருடத்தின் பல பிரிவுகளுக்கான நோபல் பரிசு வழங்கிவரும் நிலையில், நேற்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதன் படி, அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகிய மூன்று பேருக்கும், உலக வறுமையை போக்குவது தொடர்பான ஆய்வு நடத்தியதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிஜித் பேனர்ஜி இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தவர். அவருடன் நோபல் பரிசு வாங்கிய எஸ்தர் டஃப்லோ அவரது மனைவியாவார். மேலும் இவர் அமெரிக்காவில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுள்ளார்.
அபிஜித் பேனர்ஜிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”அமர்தியா சென்னிற்கு அடுத்து இந்தியாவிலிருந்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்ற இரண்டாம் நபர் அபிஜித் பேனர்ஜி என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மேலும் உங்கள் மனைவியான எஸ்தர் டஃப்லோவும் நோபல் பரிசு பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
உங்களுடன் சேர்ந்து நோபல் பரிசு பெற்ற மற்றவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வறுமை ஒழிப்பிற்கான உங்களது ஆய்வு பணிகள் மிகவும் முக்கியமானது. ஒரு பொருளாதார மாணவராக, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கான பாதையை அமைத்து தருபவர்களை அங்கீகரிப்பதில் நான் மகிழ்கிறேன். மேலும் உங்களின் எதிர்கால ஆய்வுகள் வெற்றியடைய மனமாற வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.
அபிஜித் பேனர்ஜி 1983 ஆம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பயின்றபோது மாணவர் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக அவர் கைது செய்யப்பட்டு சில நாட்களிலேயே விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய அரசால் நடைமுறைபடுத்தப்பட்ட ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு ஆகியவற்றை விமர்சித்துள்ளது போன்ற தகவல்கள் குறிப்பிடத்தக்கது.