நிலவு குறித்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ள இஸ்ரோ சந்திரயான் திட்டம் மூலம் தொடர்ந்து நிலவு குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் – 1 நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய்ந்தது. சந்திரயான் – 2 திட்டம் கடைசி நேரத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் – 3 நிலவின் தென் துருவத்தில் இறங்கும் முதல் விண்கலமாக சாதனை புரிய உள்ளது.
இந்நிலையில்தான் ரஷ்யா நிலவு ஆராய்ச்சிக்காக லூனா-25 என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியுள்ளது. இந்த லூனா-25 சந்திரயானை போல சுற்றி சுற்றி செல்லாமல் நேரடியாக பயணித்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைய உள்ளது. சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்கும் அதே நாளில், அதே தென் துருவத்தில் லூனா-25ஐ தரையிரக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
சந்திரயானை போல லூனாவும் நிலவின் தென் துருவத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உள்ளது. சந்திரயான் தரையிறங்குவதற்கு முன்னதாகவே லூனாவை தரையிறக்கி தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற சாதனையை படைக்க ரஷ்யா திட்டமிட்டு வருகிறது. இந்திய விஞ்ஞானிகள் ரஷ்யாவை முறியடித்து நிலவு ஆய்வில் சாதனை படைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.