நான்கு பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண், காவல் நிலையத்தில், போலீசார் கொடுத்த சித்ரவதை தாங்கமுடியாமல் வழக்கை திரும்ப பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த, 33 வயதுள்ள ஒரு பெண்ணை, அவரது கணவரின் நண்பர்கள் நான்கு பேர் இரண்டு வருடத்திற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தனர். மிரட்டல் காரணமாக இதுகுறித்து, அந்த பெண் யாரிடம் கூறவில்லை. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை.
ஒரு வழியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, அந்த பெண் கடந்த ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், தொடர்ச்சியான மிரட்டல் மற்றும் போலீசாரின் சித்ரவதை காரணமாக, அந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றார். உன்னை கற்பழித்தவர்களில் யார் உன்னை அதிகமாக சந்தோசப்படுத்தியது என்கிற ரீதியில் போலீசார் கேள்வி கேட்க, அதை பொறுக்க முடியாமல், புகாரை திரும்ப பெற்றுள்ளார் அப்பெண்.
அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து, பாக்கியலட்சுமி என்ற பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமீபத்தில், பாக்கியலட்சுமி, பாதிக்கப்பட்ட அப்பெண், அவரின் கணவர் மற்றும் ஒரு பெண் உரிமை ஆர்வலர் அகியோர் செய்தியாளர்களை சந்தித்து இதுபற்றி கூறினர். சிபிஎம் கட்சியை சேர்ந்த ஜெயந்தன், பினேஷ், ஜினேஷ் மற்றும் சிபி என்கிற 4 பேர்தான் அப்பெண்ணை கற்பழித்ததாகவும், போலீசார் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதுபற்றி கேரள டிஜிபி மற்றும் முதலமைச்சரை, வரும் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.