இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் பெரும்பான்மை பெற்றுள்ள மத்திய பாஜக அரசு அதை இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதனால் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இதுதவிர அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களே போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் அதிகார போக்கான செயல்பாட்டையும், குடியுரிமை சட்டத்தையும் எதிர்த்து கேரளாவில் அனைத்து கட்சி போராட்டம் நடைபெற இருக்கிறது.
டிசம்பர் 16ல் கேரளா முழுவதும் நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில் ஆளும் சிபிஎம் கட்சியும், எதிர்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட உள்ளன. மத்திய அரசுக்கு எதிராக மாநிலத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகியவை இணைந்து போராடுவது மற்ற மாநிலங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.