உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த படால் பாபு என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான சனா ராணி என்பவரை காதலித்தார். இதையடுத்து, அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இந்திய எல்லையை கடந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு நுழைந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இருவரும் இரண்டரை ஆண்டுகளாக பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்து பின்னர் காதலர்களாக மாறி உள்ளதாக தெரிகிறது.
ஆனால், அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில், அவர் தன்னுடைய நண்பர் மட்டும் தான் என்றும், அவரை திருமணம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லையெனவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையாக வைத்து, கட்டாயப்படுத்தி சனா ராணியை திருமணம் செய்ய முயற்சித்ததாக படால் பாபு மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.