இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அந்த வகையில், அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளைத் துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று மாலை 5.35 மணி அளவில் இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதனை அடுத்து அடுத்தடுத்த கட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது