நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில் ராக்கெட் ,விண்கலத்தை புவி வட்டபாதையில் கொண்டு நிறுத்தியது. பின்பு சுற்றுவட்டபாதை படிபடியாக அதிகரிக்கப்பட்டு, நிலவை நோக்கி திசை மாற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2-வை சேர்க்க திட்டமிடப்பட்டது. அத்திட்டத்தின் படி, சந்திரயானின் திரவ இன்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை இயக்கப்பட்டது. இதனால் நிலவின் வட்டபாதையில் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.
வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி, விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டார் பிரிக்கப்பட்டு, செப்டம்பர் 7 அன்று நிலவில் மெதுவாக இறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.