ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் பல இடங்களில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 38000 துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜம்மு காஷ்மீரின் முக்கியமானத் தலைவர்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து இன்று காலை பிரதமர் மோடியின் இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வழக்கமாக புதன் கிழமையில்தான் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும். ஆனால், திங்கள்கிழமை நடந்ததற்கான விளக்கம் குறித்து தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.