கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள், பிரபலங்களின் வீடுகள் உள்பட முக்கிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை அடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள 44 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இருக்கிறது.
மேலும், அந்த மின்னஞ்சலில் கட்டிடங்களின் பல பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவை யாருக்கும் கண்ணுக்கு தெரியாத வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் பள்ளிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
தீயணைப்பு துறையினர், மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியும், சந்தேகம் அடையும் வகையில் எந்த விதமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அடுத்து, போலியான வெடிகுண்டு மிரட்டல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த மிரட்டல்களை அனைத்தையும் ஒரே நபர் தான் விடுத்தாரா, அவர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.