டெல்லியில் புதிய மதுபான கொள்கையை செயல்படுத்துவதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய பிரச்சனையாக மாறியது. இந்த ஊழல் புகார் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு பிரிவை சேர்ந்த நிர்வாகி விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை ஐந்து முறை சம்மன் அனுப்பியும் அவர் அஜராகவில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
இதை அடுத்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கான சம்மனை ஏற்காமல் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி 17ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.