ஒரே நிறம், பல நிறங்கள், கல் பதித்தது, கை வேலை என பல்வேறு வகைப் பட்டுப் புடவைகள் எல்லாம் எடுத்தாகிவிட்டது. தற்போது தீபாவளிக்கு என்னதான் எடுப்பது என்று மண்டை காய்ந்து போய் இருக்கும் பெண்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.
ஆம், சென்னை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ஒலிக்கும், ஒளிக்கும் நவீன பட்டுச்சேலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை தொடக்க விழா மற்றும் நவீன வடிவமைப்புகள் கொண்ட சேலைகளின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
இந்த சேலையின் முந்தானை மற்றும் பார்டர்களில் மின்மினி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்மினி விளக்குகள் மட்டும் கொண்ட சேலைகளும், மின்மினி விளக்குகள் மற்றும் இசையை எழுப்பும் கருவி பொருத்திய சேலை என 2 வகையாக சேலைகளை வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த புடவை பேட்டரியால் இயங்கும் தன்மை கொண்டது. மின்மினி விளக்கும், இசையும் தேவையில்லாத நேரத்தில் பேட்டிரியை எடுத்து விடலாம். மேலும் சேலையை சலவை செய்யும் போதும் பேட்டரியை எடுத்துவிடலாம். இந்த சேலையின் விலை வெறும் ரூ.4,500 தான். இந்த பட்டுச்சேலையை கட்டிச்சென்றால் இருட்டில் சென்றாலும் ஜொலிக்கலாம்.
கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி ஜனவரி 31-ந் தேதி வரை பருத்தி மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், ஆயத்த ஆடைகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.