திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

Mahendran

செவ்வாய், 18 மார்ச் 2025 (18:58 IST)
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில், சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், மற்றும் திருத்தேரோட்டம் சிறப்புப் பெற்றவை. இந்த நிகழ்வுகளுக்காக,  மீனாட்சியின் திருமணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருளுவது மகத்தான சம்பவமாக கருதப்படுகிறது.
 
அதேபோல், பங்குனி மாதத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடைபெறும் பங்குனி பெருவிழா சிறப்புமிக்கதாகும். இதில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர், மகனான முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடத்திவைத்து கோவிலுக்கு திரும்புவது பழமையான வழக்கம்.
 
இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நீடிக்கும் விழாவின் 11-ஆம் நாளில், சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல் சேவல் கொடி சூட்டி, தங்க கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் நடைபெற்றது. இன்று, மிக சிறப்பாக சுப்பிரமணியர்-தெய்வானை திருமணம் நடைபெற்றது.
 
பக்தர்களுக்காக, விழா நிகழ்வுகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாளை  அதாவது மார்ச்19-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி கிரிவல பாதை வழியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்