கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் மாசிமக தேரோட்டம்: குவிந்த பக்தர்கள்..!

Mahendran

புதன், 12 மார்ச் 2025 (19:05 IST)
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாக சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் சமேத சக்கரபாணி பெருமாள் கோவில் விளங்குகிறது.
 
இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன் பகுதியாக, இந்தாண்டு விழா மார்ச் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.   தினமும், பெருமாளும் தாயார்களும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு வீதி உலா தரிசனம் அளித்தனர்.
 
மாசி மக விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.  சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் உடன் சக்கரபாணி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
 
இதையடுத்து, தேரோட்டம் தொடங்கியபோது, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேலும், வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பெருமாளை கண்ணார தரிசனம் செய்து ஆனந்தம் அடைந்தனர்.
 
தேரோட்டம் நாலு மாட வீதிகள் வழியாகச் சென்று கோவில் முன் நிலை பெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்