பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

Siva

ஞாயிறு, 16 மார்ச் 2025 (19:53 IST)
சென்னை வடபழனி முருகன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, 4 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைத்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த கட்டணமில்லா திருமணங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன. 2022-23 நிதியாண்டில் 500 ஜோடிகள், 2023-24ம் ஆண்டில் 600 ஜோடிகள், 2024-25ம் ஆண்டில் 700 ஜோடிகள் என மூன்று ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்று வடபழனியில் நடைபெற்ற திருமணத்துடன் சேர்த்து, இதுவரை 1,786 ஜோடிகளுக்கு 4 கிராம் தங்கத் தாலியுடன் ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமும் பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரு மாநில கட்சியின் தலைவர் என்று யாரேனும் இருப்பாரெனில், அவர் அண்ணாமலை ஒருவராகத்தான் இருக்க முடியும்.

காமாலை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அனைத்தும் மஞ்சளாக தோன்றும் என்பதுபோல், எந்த விஷயத்திலும் குறை காண்பதற்கே பழக்கப்பட்ட அண்ணாமலை, நிதிநிலை அறிக்கை குறித்து நேர்மறையாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

நிதிநிலை அறிக்கை, உலகளவில் பாராட்டப்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை உலக அரங்கமே உயர்த்திப் பேசும் நிலையில், மக்களின் ஆதரவைப் பெறாத சிலர் குற்றம் சாட்டுவதற்காக நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உண்மையான விவசாயிகள் வேளாண்மை சார்ந்த நிதிநிலை அறிக்கையை ஆதரித்து வருகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்