கஷ்டமில்லாத வீடுகளை காண்பது அரிது. எதிலும் சிக்கல், தடை இல்லாமல் இருக்காது. எதிரிகளால், உறவினர்களால் தொல்லை, எடுத்த காரியத்தை முடிக்க முடியவில்லையா? நினைத்த காரியத்தை தொடங்கவே முடியவில்லையா? அப்படியென்றால் பைரவரை வழிபட்டால் உங்களுக்கு அவர் வழிகாட்டுவார்.
சிவபெருமானின் கோவில்களில் காவல் தெய்வமாக காத்து நிற்பவர் பைரவர். பன்னிரெண்டு கரங்களுடன் சந்திரனை தலையில் கொண்டு, நாகத்தை முப்புரிநூலாக எடுத்து வீரமான திருக்கோலம் பூண்டவர் பைரவர். சிவபெருமானின் காவலர் மட்டுமல்ல அனைவரையும் உச்சத்திற்கும், கீழ் நிலைக்கும் கொண்டு போகும் நவகிரகங்களில் சக்தி மிக்கவரான சனி பகவானின் குருவானவர் பைரவர்.
தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் விரதமிருந்து சிவாலயங்களுக்கு சென்று பைரவர் திருவிக்ரஹத்திற்கு செவ்வரளி மாலை சார்த்தி, பைரவாஷ்டக பாராயணம் செய்து வந்தால் சகல தடைகளும் நீங்கும். எதிரிகளால் ஆபத்து, தொடங்கிய செயலை முடிக்க முடியாத நிலை ஆகிய தடைகளை உடைத்து காப்பார் பைரவர்.