தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய, ஆடவரி மாட்லகு அர்த்தலே வேருலே படத்தின் ரீ-மேக், யாரடி நீ மோகினி.
அப்பா ரகுவரன். மகன் தனுஷ். தறுதலையாக திரியும் மகனை திட்டுகிறார் ரகுவரன். அவன் பொறுப்பானவனாக மாறி, இனி நீ வேலைக்குப் போக வேண்டாம் என்று கூறும்போது, கல்லால் அடிக்கிறார். மகனுக்கு காதல் தோல்வி ஏற்படும்போது, சேர்ந்து தண்ணி அடித்து சோகத்தை பகிர்ந்து கொள்கிறார். கூடவே அடிகட் ஆகாதே என அட்சைஸும் செய்கிறார்.
எந்த விதிமுறைக்குள்ளும் அடங்க மறுக்கும் இந்த உறவு சிறிய புன்னகையுடன் நம்மை ஈர்க்கிறது. ரகுவரனின் வசன உச்சரிப்பு சர்க்கஸ் சிங்கம் மாதிரி. ரகுவரனின் சாட்டை சொடுக்கலுக்கேற்ப, சீறுகிறது தாவுகிறது சாந்தமடைந்து சரணடைகிறது. நயன்தாராவிடம் சிரித்துக் கொண்டே, காதலைப் பற்றி எனக்கென்ன தெரியும் என்று கேட்கிறாரோ... ரகுவரனின் இழப்பின் பிரமாண்டம் நம்மை தீண்டிச் செல்லும் அபூர்வ தருணம் அது.
தனுஷூக்கு நயன்தாராவை கண்டதும் காதல். குடும்ப காரணம் சொல்லி காதலை நிராகரிக்கிறார் நயன்தாரா. அவரது திருமணத்திற்கு அவரது ஊருக்கே செல்கிறார் தனுஷ். ஆம், பலப் படங்களில் பார்த்தது போல், நயன்தாராவை திருமணம் செய்யப் போகிறவர் தனுஷின் உயிர் நண்பர். கிளைமாக்ஸ்? அதுவும் ஏற்கனவே நாம் பலப் படங்களில் பார்த்தது தான்!
ஆனால், அது விஷயமில்லை. காட்சியின் ஒவ்வொரு நகர்விலும் சின்னதாக சுவாரஸிய தூண்டிலை செருகியிருக்கிறார் திரைக்கதையாசிரியர். நயன்தாராவுக்கு ஊரில் ஒரு தங்கை. தனுஷின் மீது காதலால் கசிந்துருகி அவர் செய்யும் அலம்பல், அதகளம். ஆனாலும் அந்த பாலக்காட்டுப் பக்கத்திலே டூயட் கொஞ்சம் ஓவர். கண்களில் நீர் கோர்க்க சோகத்தில் லேசாக தலையசைய தனுஷ் காட்டும் எஸ்பிரஷன் ஏ கிளாஸ். நயன் தாரா, எளிமையாகச் சொன்னால் ஏஞ்சல்! எப்படிப் பார்த்தாலும், உலக அழகிப் போலொரு தோற்றம். நடிப்பு? அகன்ற விழிகளும், அழகிய முகமும் அதனை பார்த்துக் கொள்கின்றன.
மூன்று நாள் மூக்கடைப்பால் அவதிப்பட்டவரை பாட வைத்தது போல் இரண்டு பாடல்கள். நல்ல டியூனையும், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளையும் நாசமாக்கி விடுகிறார், மூக்கடைப்பு பாடகர். மற்றப் பாடல்களில் யவுன் ஷங்கர் தன்னை ராஜாவாக நிலை நாட்டியிருக்கிறார், பின்னணி இசையிலும்!
கதையை மீறாத எடிட்டிங், ஒளிப்பதிவு இரண்டும் இயக்குனரின் மிகப் பெரிய பலங்கள். நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்த மாதிரி எண்ண முடியாத நயன்தாராவின் குடும்ப உறுப்பினர்கள், இலக்கின்றி இழுபடும் கிளைமாக்ஸ் என சலிப்புதரும் விஷயங்களும் உண்டு.
தனுஷின் நண்பனாக வரும் கார்த்திக்கிற்கு ஒரு டீஸ்பூன் உணர்ச்சியை காட்டினாலே ஒரு பீப்பாயாக அதை பிரதிபலிக்கும் முகம். இறுதி காட்சியில் அவர் காட்டும் முகபாவம். குளோசப்பில் நம்மை பயமுத்துகிறது.
அதரபழசான கதையில் கொஞ்சம் காமெடி அமிர்தத்தை கலந்து பரிமாறியிருக்கிறார்கள். கலகலப்பாக ரசித்து விட்டு வரலாம்!