பாகிஸ்தானின் ’லிட்டில் மாஸ்டர்’ என்று அழைக்கபடும் ஹனிஃப் முகமது 1934ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். பின்னர், இளம் வயதிலேயே கராச்சி சென்றுவிட்டார். 1952ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக களமிறங்கினார்.
தனது 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹனிஃப் முஹமது, 12 சதங்கள் மற்றும் 15 அரைச் சதங்கள் உள்பட 3,915 ரன்கள் எடுத்துள்ளார்.
1957/58 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுனில் நடந்த போட்டியில், ஹனிஃப் முகமது 337 ரன்கள் குவித்தார். இதுவே அவருடைய அதிகப்பட்சமாகும். இந்த ரன்களை குவிக்க அவர் 16 மணி நேரங்கள் எடுத்துக் கொண்டார். இதுவே டெஸ்ட் வரலாற்றில் தனிநபர் அதிக நேரம் விளையாடிய இன்னிங்ஸ் ஆகும்.
மேலும், ஆசிய பேட்ஸ்மேன் ஒருவர் துணை கண்டத்திற்கு வெளியே பெற்ற அதிகபட்ச ரன்னாக இன்றுவரை இருக்கிறது. இதுதவிர கராச்சி அணிக்காக முதல்தர போட்டியில் விளையாடிய ஹனிஃப் முஹமது பஹவல்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 499 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹனிஃப் முஹமது கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஹனிஃப் நேற்று காலை அவர் மரணம் அடைந்தார்.