பிரித்வி ஷா உடல் எடை எவ்வளவு இருந்தா என்ன?... ஆதரவாகப் பேசிய கவாஸ்கர்!

vinoth

புதன், 30 அக்டோபர் 2024 (07:39 IST)
திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார். அதேப் போல அவரைப் பெரிதும் நம்பி எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் நடந்து வரும் ரஞ்சிக் கோப்பைக்கான தொடரில் இருந்து அவரை நீக்கியுள்ளது மும்பை அணி. அதற்கு அவரின் அதிக உடல் எடையும், வலைப்பயிற்சிகளில் ஆர்வம் காட்டாமல் அவர் அலட்சியமாக இருப்பதும்தான் காரணம் என மும்பை அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பிருத்வி ஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “ஓய்வு தேவை. நன்றி” என நக்கலாக பதிவிட்டுள்ளார். 

இது குறித்து ஷாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். அதில் “பிருத்வி ஷாவின் உடலில் 35 சதவீதம் அதிகக் கொழுப்பு உள்ளதாக கூறுகிறார்கள். இதே போலதான் சர்பராஸ் கானின் உடல்வடிவும், எடையும் சமீபத்தில் விவாதிக்கப்பட்டது.  ஆனால் அவர் சமீபத்தில் 150 ரன்கள் சேர்த்து தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.  இதன் மூலம் உடல் எடையோ இடுப்பு அளவோ கிரிக்கெட்டுக்கான பிட்னெஸ் இல்லை என்பது தெளிவானது. நீங்கள் 150 ரன்கள் அடிக்கிறீர்களா? ஒரு நாள் முழுவதும் பேட் செய்ய முடியுமா? ஒரு நாளில் 20 ஓவர்கள் வீச முடியுமா? என்பதுதான் முக்கியம்.  அதுதான் பிட்னெஸுக்கான தகுதியாக இருக்க வேண்டும்.  உடலில் குறைந்த அளவுக் கொழுப்புள்ள எத்தனை பேட்ஸ்மேன்கள் பிருத்வி ஷா போல 379 ரன்கள் அடித்துள்ளார்கள்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்