இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தது, தந்தையின் அன்பு என்பதும் அதே வேளையில் இவ்வுலகம் பாவம் என்ற அநீதியான அமைப்பில் நிறைந்திருந்ததை முழுவதும் அகற்றி, மனுக்குலம் பாவத்திலிருந்து முழு விடுதலை அதாவது, அரசியல், சமூக, பொருளாதார, சமய, கலாசார நிலைகளில் தனி மனித விடுதலை பெற வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கமாக இருந்தது.
இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்ற நிலையில் அவர் அரண்மனையில் அலங்காரமாக ஆடம்பரமாக பிறக்காமல் மாட்டுத் தொழுவத்தில், ஏழ்மையின் கோலமாக தாழ்மையின் வடிவாகப் பிறந்தார். இயேசு பிறந்தார் என்ற செய்தி இவ்வுலகில் முதன்முதலாக ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இறைத் தூதரால் அறிவிக்கப்பட்டது.
ஏழைகளுக்கு காட்சியளிப்பவராய், ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவாய் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இயேசுவின் பிறப்பின் செய்தி நமக்கு இன்று கூறுவது என்னவென்றால் ஏழைபணக்காரன், ஆண்டான் அடிமை, ஆண்பெண், வெள்ளைகருப்பு சாதிய வேறுபாடுகள் என்றும், இனம், மொழி என்ற நிலையில் வன்முறைக் கலாசாரங்கள் நிலவி வரும் சூழலில், அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவும், ஒன்றாக, நிறைவாக அனைத்தையும் பகிர்ந்து வாழவும் வேண்டும் என்பதே ஆகும்.