குவைத் நாட்டில் தெருவோரம் வாழ்ந்து வந்த நாய்க் குட்டி ஒன்றை, அங்கு பணிபுரியும் இலங்கை யுவதியொருவர் எடுத்து சென்று, தமது தொடர்மாடி குடியிருப்பில் வளர்த்து வந்துள்ளார். ''ரொஸ்கோ" என பெயர் சூட்டி, மிகவும் பாசமாக இந்த நாயை வளர்த்து வந்துள்ளார் இந்த இலங்கை யுவதி.
''ரொஸ்கோ" சற்று வளர்ந்த நிலையில், குரைக்க ஆரம்பித்துள்ளது. இதைப் பார்த்த தொடர்மாடி குடியிருப்பில் உள்ளவர்கள், குடியிருப்பின் உரிமையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நாயை தமது தொடர்மாடி குடியிருப்பில் வைத்திருக்கக்கூடாது எனவும், அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்;.
இதையடுத்து, தொடர்மாடி குடியிருப்பின் உரிமையாளர், நாயின் உரிமையாளரை சந்தித்து, 20 நாட்களுக்குள் நாயை வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மிகுந்த பாசத்துடன் ரொஸ்கோவை வளர்த்து வந்த இலங்கை யுவதிக்கு இந்த நாயை விடுவிப்பதற்கு விருப்பம் இருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் பேஸ்புக் வலைத்தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
தான் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தெளிவுபடுத்தி, தமது நாயை காப்பாற்ற உதவி செய்யுமாறு அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்தப் பதிவை, இலங்கையின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகப் பேராசியர் கலாநிதி விஷாகா சூரியபண்டார பார்த்துள்ளார். இதையடுத்து, பேஸ்புக் வழியாக அந்தப் பெண்ணை தொடர்புக் கொண்ட விஷாகா சூரியபண்டார, விடயங்களை கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, விரைந்து செயற்பட்ட விஷாகா சூரியபண்டார, பலரிடம் உதவி கோரியுள்ளார். தனக்கு பல்வேறு வகையில், பல தரப்பினர் ரொஸ்கோவை காப்பாற்ற உதவிகளை வழங்கியதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 100 ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை இந்த நாயை காப்பாற்றுவதற்கு பலரும் உதவிகளை வழங்கியதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதையடுத்து, சுமார் 20 நாட்களுக்குள் குறித்த நாயை நாட்டிற்கு கொண்டு வர தனக்கு வழி கிடைத்ததாக கலாநிதி விஷாகா சூரியபண்டார தெரிவிக்கின்றார். இந்த நிலையில், கடந்த 28ம் தேதி குவைத் நாட்டிலிருந்து ரொஸ்கோ, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக, இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கை வந்தடைந்த ரொஸ்கோவை வரவேற்க, இதற்கான முயற்சிகளை செய்த கலாநிதி விஷாகா சூரியபண்டார உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். ரொஸ்கோவை முதல் தடவையாக பார்க்கும் போது, தனது உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை, பிபிசி தமிழுடன், விஷாகா சூரியபண்டார பகிர்ந்துக்கொண்டார்.
''குழந்தையை பெற்றெடுத்த சந்தோசம் எனக்கு அந்த தருணத்தில் கிடைத்தது. இல்லையென்றால், தனக்கு தேவையான ஒருவர் எங்கோ சென்று, பல வருடங்களுக்கு பின்னர் வருகை தந்த சந்தோசம் கிடைத்தது. எப்படி வருகைத் தரும் என பயத்துடன் இருந்தேன். விலங்குகள் மனிதர்களை விடவும் உணர்வுபூர்வமானவை. அதன் உரிமையாளரும் மிகவும் உணர்வுபூர்வமானவர். ரொஸ்கோவின் உரிமையாளர் அழுதவாறே, ரொஸ்கோவை விமானத்தில் அனுப்பி வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ரொஸ்கோ தனியாகிவிட்டது. தனது உரிமையாளர் இல்லை என்ற போது, அதற்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். ரொஸ்கோவிற்கு பெரும்பாலும் அதிர்ச்சியினால் ஏதாவது நடக்குமா? என்ற பயத்தில் நாங்கள் இருந்தோம். இரவு இரவாக தூக்கமின்றி காத்திருந்தோம். அதனை பார்த்த பின்னர், நான் பெரு மூச்சு விட்டேன். உண்மையிலேயே பெரு மூச்சு விட்டேன்.
நான் இந்த வேலையை செய்தேன் என்ற திருப்தியில் பெரு மூச்சு விட்டேன். நான் மாத்திரம் அல்ல, நாங்கள் இந்த வேலையை செய்தோம் என சந்தோசம் வந்தது. மகிழ்ச்சியின் உயரிய இடத்திற்கு சென்ற சந்தர்ப்பம் என்று இதனை கூறலாம்" என விஷாகா சூரியபண்டார தெரிவிக்கின்றார்.
''20 நாட்களில் இந்த நாயை எம்மால் நாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை என்றால், அந்த நாட்டில் நாயை கொலை செய்வார்கள் என நான் ஊடகங்களுக்கு தவறுதலாக கூறிய கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான் கூறவந்த விடயம் திரிபடைந்து விட்டது.
நாய்யை 20 நாட்களின் பின்னர் வெளியில் விட்டால், அது தனியாகி விடும் எனவும், அதனால், அது ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் கூறுவதற்கு பதிலாகவே எனது வார்த்தையில் தடுமாற்றம் ஏற்பட்டு கொலை செய்திருப்பார்கள் என கூறிவிட்டேன். உண்மையில் இந்த கருத்தை நான் மீளப் பெற்றுக்கொள்கின்றேன்" என அவர் மேலும் கூறுகின்றார்.
''நான் உயிரிழக்கும் இறுதித் தருணத்தில், எங்களுக்கு பால் கொடுப்பார்கள் அல்லவா. அந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் எனது நினைவுகளில் வரும்" என அவர் குறிப்பிட்டார்.
ரொஸ்கோதற்போதுஎப்படிஉள்ளது ?
''எனது வீட்டில் இருக்கிறது. இன்னும் இந்த சூழலுக்கு அது பழக்கப்படவில்லை. நாயை பாதுகாப்பதற்கே இந்த போராட்டத்தை செய்தோம். அதனால், அதனை சுதந்திரமாக இருக்க சந்தர்ப்பம் வழங்கியுள்ளேன். சூழல் முழுமையாக மாற்றம் அடைந்துள்ளது. அதனுடைய குடும்பம் இல்லை. அது இளம் பெண் ஒருவருடன் வாழ்ந்தது. ஆண்கள் தொடர்பில் அதற்குத் தெரியாது. அவர் பயந்துள்ளார். எனது வீட்டை முழுமையாக அவருக்கே கொடுத்துள்ளேன்.
எனது வீடு என்பதை நான் மறந்து விட்டேன். இது அவருடைய வீடு. எனது கட்டிலில் நித்திரை கொள்கின்றது. அவருக்கு பால் போத்தலில் கொடுத்து பழக்கப்படுத்தியுள்ளனர். நான் மிகவும் சிரமப்பட்டு, பாலை ஊட்டினேன். என்னுடன் பிரச்சினையின்றி இருக்கின்றார். அவருக்கு நான் வீட்டை பொறுப்பு கொடுத்து விட்டேன். என்னை ஒரு தடவை கடித்து விட்டது. ஆனால், இப்போது நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம், என் பின்னாலேயே வருகிறது." என விஷாகா சூரியபண்டார தெரிவிக்கிறார்.