தேசிய புலனாய்வு முகமை நாடு முழுவதும் 468 வழக்குகளை விசாரித்து வருவதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் ஏற்கெனவே 11 சம்பவங்கள் தொடர்பாக என்ஐஏ விசாரித்து வருகிறது.
"என்ஐஏவை பொறுத்தவரை தேசிய அளவிலான அல்லது சர்வதேச அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தவல்ல குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதுதான் அதன் முதன்மையான பணி" என்கிறார் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி தியாகராஜன்.
"தேசிய அளவிலான பிற புலனாய்வு அமைப்புகள் மாநிலங்களின் ஒப்புதல் அல்லது பரிந்துரைக்குப் பிறகு விசாரணையைத் தொடங்கும். ஆனால் என்ஐஏ அமைப்பு மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவற்றின் எல்லைக்குள் சென்று விசாரணை நடத்த முடியும்" என்கிறார் தியாகராஜன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்துக்கும் மேற்பட்ட சம்பவங்களில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியிருக்கிறது. அவற்றில் பல சம்பவங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃபேஸ்புக் பதிவு முதல் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டு வரை பல்வேறு சம்பவங்கள் இவற்றில் அடங்கும்.
ராமலிங்கம் கொலை வழக்கு
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 5 பேர் தலைமறைவாக உள்ளதாக என்ஐஏவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு 'அன்சருல்லா' வழக்கு
தடை செய்யப்பட்ட அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் அன்சருல்லா என்ற குழுவை அமைத்து செயல்பட்டதாக திவான் முஜ்பீர் உள்ளிட்ட 11 பேர் மீது என்ஐஏ அமைப்பு 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப் பதிவு செய்தது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ குறிப்பிடுகிறது.
இந்த வழக்கில் கடந்த மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக என்ஐஏ கூறுகிறது.
மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையதாக வழக்கு
2020-ஆம் ஆண்டு தோழர் விவேக் என்ற பெயரில் இந்திய சுதந்திர தினத்தை விமர்சிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விவேகானந்தன் என்பவர் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. என்ஐஏ அமைப்பின் இணையதளத்தில் இருக்கும் முதல் தகவல் அறிக்கையில் விவேகானந்தன் தீவிரவாத இயக்கமாக பட்டியலிடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சென்னை பூந்தமல்லியில் இருக்கும் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர் விசாரணையில் இருப்பதாக என்ஐஏ குறிப்பிடுகிறது.
பேஸ்புக்கில் மதவெறுப்பைத் தூண்டியதாக வழக்கு
இதே போன்று 2020-ஆம் ஆண்டில் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டிவிடுவது போன்ற ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதாக மதுரையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் மீது தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.
இவரது செல்போனை ஆய்வு செய்ததில் ஐஎஸ்ஐஎஸ், ஹிஸ்ப்-உல்-தாஹிர் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் சமூக ஊடகங்கள் மூலமாக தொடர்பு இருப்பது தெரிய வந்ததாக என்ஐஏவின் இணையதளத்தில் உள்ள முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
2021-ஆம் ஆண்டு மே மாதத்தில் முகமது இக்பாலுக்குச் சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விடுதலைப் புலிகள் போன்ற இயக்கத்தை அமைக்க திட்டமிட்டதாக வழக்கு
சேலத்தில் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டியதாக 2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் சேலத்தைச் சேர்ந்த நவீன், சஞ்சய் பிரகாஷ் ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. முதலில் சேலம் காவல்துறையினர் விசாரித்த இந்த வழக்கானது என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பு உருவாக்கி ஆயுதப் போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என விசாரணையில் தெரிய வந்ததாக என்ஐஏ அமைப்பு தெரிவித்தது.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு
2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த தௌபிக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடத்தப்பட்டதைப் போன்ற தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும், பழிவாங்கும் வகையில் வில்சனை கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வேறுசிலரும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பேசப்பட்ட இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக என்ஐஏ கூறுகிறது.
இதேபோல 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14 பேரை என்ஐஏ அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்து மதத் தலைவர்களைக் கொல்ல சதி செய்ததாக வழக்கு
2018-ஆம் ஆண்டில் கோவையைச் சேர்ந்த சிலர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்த இந்து மதத் தலைவர்களைக் கொல்லச் சதி செய்ததாகவும், அதன் மூலம் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்க முயன்றதாகவும் ஏழு பேரைக் கைது செய்து என்ஐஏ அமைப்பு விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.