`இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் - ரசிகர்கள் வாழ்த்து மழை

புதன், 6 ஜனவரி 2021 (11:54 IST)
தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் இன்று (ஜனவரி 6) தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
 
தமிழ்த் திரையுலக இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை பெற்று, சர்வதேச அரங்கில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஏ.ஆர். ரஹ்மான்.
 
1966ஆம் ஆண்டு பிறந்த ஏ.ஆர்.ரஹ்மான், அவரது ஆரம்ப காலங்களில் சுமார் 500 படங்களுக்கும் மேல் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சில ஆண்டுகள் விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம், திரைப்படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்தார்.
 
முதல் திரைப்படமாக இருந்தாலும், யாருமே எதிர்பார்க்காத வகையில் அது ரஹ்மானுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ரோஜா திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் தனித்துவமான இசையை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிய நிலையில், மறுபுறம் அது அவருக்கு முதல் தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.
 
அதன் பின்னர் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி, பாலிவுட், ஹாலிவுட் என சர்வதேச எல்லைகளிலும் தடம் பதிக்கத் துவங்கினார் ரஹ்மான். இதனிடையே அவர் வெளியிட்ட 'வந்தே மாதரம்' என்ற இசைத் தொகுப்பு அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டுச் சேர்த்தது. இதுமட்டுமின்றி, 'பாம்பே ட்ரீம்ஸ்' என்ற மேடை நாடகம் உள்ளிட்ட இசைத் துறையின் பல்வேறு பரிமாணங்களிலும் தனது திறமைகளை அழுத்தமாக பதிவு செய்தார் ரஹ்மான்.
 
ரோஜாவுக்கு கிடைத்த தேசிய விருது முதல், இதுவரை ரஹ்மான் பெற்ற விருதுகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. ஆறு தேசிய விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், 11 ஐ.ஐ.எஃப்.ஏ. (IIFA) விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகள், பாப்தா, கிராமி விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் எண்ணற்ற விருதுகளையும் பெற்ற இசையமைப்பாளராக விளங்குகிறார் ரஹ்மான்.
 
ரஹ்மானின் இசைக்காகவே திரையரங்குகளில் ஓடிய படங்களின் எண்ணிக்கை ஏராளம். பாடல்கள், பின்னணி இசை, மேடை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பல்வேறு புதுமைகளை புகுத்தி ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்த ரஹ்மான், 'சன் சைன் ஆர்க்கெஸ்ட்ரா' என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் அளித்து வருகிறார்.
 
ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணி பாடகர்கள் முதல், அவரது இசைப் பள்ளியில் பயின்று சாதனை படைத்த லிடியன் நாதஸ்வரம் வரை, இசைத்துறைக்கு அளவில்லா பங்களிப்பு செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
 
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஹ்மானுக்கு பலரும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் HappyBirthdayARRahman என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்