அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கியது. உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவதில் ரஷ்யாவுக்கு விருப்பம் இல்லாததே இந்த போருக்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த போரில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
ரஷ்யாவை விட உக்ரைன் சிறிய ராணுவத்தையே கொண்டிருந்தாலும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா வழங்கும் நிதி உதவி மற்றும் ஆயுத உதவியை கொண்டு ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போரை நடத்தி வருகிறது. இந்நிலையில் கிட்டத்தட்ட போர் தொடங்கியது முதலாக நாட்டை விட்டு வெளியே செல்லாத உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார்.
இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுடனான போரை முடித்துக் கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் உக்ரைனிடம் ஒப்படைக்கப்படுமா? என்பது பற்றி தெரியவில்லை. விரைவில் இதுகுறித்து அமைதி ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.