வண்டி ஓட்ட லைசென்ஸ் இல்ல? டாக்சியில் சென்று கொள்ளை! – அமெரிக்காவில் விநோத சம்பவம்!

செவ்வாய், 22 நவம்பர் 2022 (13:25 IST)
அமெரிக்காவில் கொள்ளையன் ஒருவன் தன்னிடம் ட்ரைவிங் லைசென்ஸ் இல்லாததால் டாக்சியில் சென்று வங்கியை கொள்ளையடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் ஹண்டிங்டன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த வியாழனன்று மாலை 5 மணி அளவில் டாக்சியில் வந்து இறங்கிய ஒரு நபர் பணியாளர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இதுதொடர்பாக சிசிடிவி காட்சி, டாக்சி எண் ஆகியவற்றை சோதனை செய்த போலீஸார் சவுத் ஃபீல்ட் பகுதியை சேர்ந்த ஜேசன் கிறிஸ்துமஸ் என்ற நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் ஜேசனின் ஓட்டுனர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்ததால், லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டுவது குற்றம் என்பதால் ஓலாவில் டாக்சி புக் செய்ததாக கூறியுள்ளாராம்.

மேலும் வங்கிக்கு டாக்சியில் வந்து இறங்கியவர் திரும்ப வரும் வரை டாக்சியை வெயிட்டிங்கில் இருக்க சொல்லிவிட்டு சென்றுள்ளார். கொள்ளையடித்துவிட்டு மீண்டும் தன் வீட்டிற்கே சென்று ஹாயாக இருந்தவரை போலீஸார் வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்