என்னை தேர்தலில் ஜெயிக்க வையுங்கள் – சீன அதிபரிடம் கெஞ்சினாரா ட்ரம்ப்?

வெள்ளி, 19 ஜூன் 2020 (08:55 IST)
இந்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எப்படியாவது ஜெயிக்க வையுங்கள் என சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் ட்ரம்ப் கெஞ்சியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டர்ம்ப் தான் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து சர்ச்சையின் நாயகனாக மாறி வருகிறார். அவர் மீது இப்போது அமெரிக்க மக்கள் பெரும்பாலோனார் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கொரோனாவை எதிர்த்து அவர் செயல்பட்ட விதம் ஆகியவை சொல்லப்படுகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எழுதியுள்ள The Room Where It Happened: A White House Memoir என்ற புத்தகம் அமெரிக்காவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தகம் வெளியாவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில் அந்த புத்தகத்தின் ஒரு பகுதி மட்டும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. 

அதில் ஜப்பானில் உள்ள ஒசாகாவில் நடந்த மாநாடு ஒன்றில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்தித்த ட்ரம்ப் தன்னை எப்படியாவது அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றி பெற செய்யுங்கள் எனக் கெஞ்சிக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நூலின் ஆசிரியர் ட்ரம்ப் கூறிய சரியான வார்த்தைகளை என்னால் கூற இயலாது. ஏனென்றால் அரசாங்கம் அந்த வார்த்தைகளை தணிக்கை செய்துள்ளது எனவும் கூறியுள்ளார். இதனால் இந்த புத்தகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடன் வெளிப்படையாக மோதலில் ஈடுபடும் ட்ரம்ப் இவ்வாறு பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்