நிலநடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களாலும், தொழில்நுட்ப தவறுகளாலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து விடும் சம்பவங்கள் அனைத்து நாடுகளில் நடந்து வருகின்றன. இவ்வாறாக கட்டிடங்கள் இடியும்போது மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது மீட்பு குழுவுக்கு சவாலான காரியமாக இருந்து வருகிறது.
முக்கியமாக இடிபாடுகளில் எந்த இடத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர் என்பதை அறிவது பெரும் சிரமமாக உள்ளது. இந்நிலையில் ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் எலிகளை மீட்பு பணியில் ஈடுபடுத்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த எலிகள் சிறிய மைக் பொருத்திய பைகளுடன் இடிபாடுகளுக்குள் செல்லும், அதன்மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களுடன் பேசி அவர்களை மீட்க முடியும் என கூறப்படுகிறது. இதுவரை 170 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.