அரசு ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்தினால் பணி நீக்கம் - மாகாண ஆளுநர் அறிவிப்பு
புதன், 30 ஜனவரி 2019 (16:56 IST)
அரசு அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபரை வேலையிலிருந்து நீக்குவேன் என்று இலங்கையின் மேல் மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே, குறித்த நபர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேல் மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அதிரடிக் கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்; "மக்கள் செலுத்துகின்ற வரிகளிலிருந்தே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றுக்குமே அரசாங்கம் வரி அறிவிக்கிறது. இவ்வாறு பெறப்படுகின்ற வரிகளில் இருந்தே அரசாங்கத்தை நடத்துகின்றோம்" என்றார்.
"இலங்கையில் யாரிடமாவது என்ன வகையான தொழில் வேண்டும் என்று கேட்டால், அரச தொழில் வேண்டும் என்றுதான் சொல்லுகின்றனர்.ஏனென்றால் வேலை செய்யத் தேவையில்லை; ஆனால் சம்பளம் கிடைக்கும்.
அரச பணியாளர்கள் தங்கள் வேலையை தொடங்கும்போதே காலை 9.30 மணி ஆகிவிடுகிறது. தேநீர் அருந்தி, பத்திரிகை பார்த்து,செய்ய வேண்டிய தனிப்பட்ட வேலைகள் அத்தனையையும் முடித்துவிட்டுத்தான், 9.30 மணிக்கு வேலைகளை ஆரம்பிக்கின்றனர்.
வேலையை தொடங்கிய பிறகு அவர்களின் போனிலிருந்து 'டொக் டொக்' என்று சத்தம் வரும். உடனே அதனை எடுத்து 'மேசேஜ்' அனுப்பத் தொடங்குவர். பிறகு 'ஃபேஸ்புக்' பார்க்கத் தொடங்குவர்.
அரச சேவையாளர்கள் ஒரு மணி நேரமாவது ஒழுங்காக வேலை செய்கின்றார்களா என்று நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நான் நினைக்கின்றேன் இரு மணிநேரம் கூட அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை . வேலை செய்பவர்கள் கடமையை விட்டுச் செல்லும்வரை வேலை செய்கின்றனர். வேலை செய்யாதவர்கள் வேலை செய்யாமலேயே 'ஐஸ்' அடித்துவிட்டுச் செல்கின்றனர்.
எனவே, யாரவது அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தினால் அல்லது ஸ்மார்ட் ஃபோன் உபயோகித்ததாக எனக்கு முறைப்பாடு கிடைத்தால், அவரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டுத்தான், அந்த அலுவலர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துவேன்"
"இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே உங்களை நியமித்துள்ளோம். மக்களுக்கான சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்" என்று மேல் மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறினார்.