3 நிமிடம் தாமதமாக வந்ததால் இருண்ட அறையில் பூட்டப்பட்ட பள்ளி மாணவர்.. விசாரணைக்கு உத்தரவு

Mahendran

வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (10:30 IST)
கேரளாவில் உள்ள கொச்சி பள்ளி ஒன்றில், ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் இருண்ட அறையில் பூட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளாவின் திருக்காக்கரா பகுதியில் உள்ள கொச்சி பப்ளிக் பள்ளிக்கு, ஒரு மாணவன் மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளான். தாமதமாக வந்ததற்காக முதலில் இரண்டு சுற்று ஓடுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட மாணவன், பின்னர் ஒரு இருண்ட அறையில் அடைக்கப்பட்டுள்ளான். 
 
இந்தச் சம்பவம் குறித்து அந்த மாணவன், "நான் பள்ளிக்கு 2-3 நிமிடங்கள் தாமதமாக வந்தேன். அவர்கள் என்னை இரண்டு சுற்று ஓட சொன்னார்கள். பின்னர், எனது பெற்றோர்கள் வந்து என்னை அழைத்து செல்ல வேண்டும் அல்லது நான் தனியாக அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் கூறினார். அந்த அறையில் ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர்" என்று தெரிவித்துள்ளான்.
 
இந்த சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோருடன் பேசிய அமைச்சர் வி.சிவன்குட்டி, "பள்ளி அதிகாரிகள் மாணவனின் பெற்றோரிடம் மாற்று சான்றிதழ் பெற்று செல்லுமாறு கூறியுள்ளனர். பெற்றோரிடம் மாற்று சான்றிதழைப் பெற வேண்டாம் என்று நான் அறிவுறுத்தினேன். கேரள கல்வி முறையில் இதுபோன்ற நடைமுறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று கண்டித்துள்ளார்.
 
மேலும் இந்த சம்பவம் குறித்த முழு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு கல்வித்துறை துணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்