ரஷ்ய சொத்துல கைய வெச்சா ரணகளம் ஆயிடும்! - ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

Prasanth K

செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (09:32 IST)

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளை அபகரிக்க ஐரோப்பிய நாடுகள் முயல்வதாக ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், அவ்வாறாக சமீபத்தில் புதினை அலாஸ்காவில் சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் போர் நிறுத்த காலத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிய நிலையில், உக்ரைனுக்கு நிலம், நீர், வான் வழி பாதுகாப்புகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது. மேலும் இந்த இடைக்காலத்தில் உக்ரைனின் நிவாரண பணிகளுக்காக உலக நாடுகளால் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துகளை பயன்படுத்தலாம் என ஐரோப்பிய நாடுகள் அதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். போர் நிறுத்த காலத்தில் ஐரோப்பாவின் படைகள் உக்ரைனை சுற்றி வருவதை ஏற்க முடியாது என்றும், ரஷ்ய சொத்துகளை அபகரிக்க முயலும் எந்த ஐரோப்பிய நாடாக இருந்தாலும் பழி தீர்க்காமல் விட மாட்டோம் என பகிரங்க எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் தங்கள் சொத்தை பறிமுதல் செய்வது அப்பட்டமான திருட்டு, அதற்கு பதில் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்