உக்ரைனுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - முன்வந்த ரஷ்யா!
புதன், 2 மார்ச் 2022 (17:04 IST)
உக்ரைனுடன் இன்றிரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் உலக நாடுகள் பல உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவி செய்வதாக அறிவித்துள்ளன. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா மெல்ல மெல்ல தாக்கி அபகரித்து வருகிறது.
உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளபோதிலும் தொடர்ந்து உக்ரைன் ராணுவம் ரஷ்ய ராணுவம் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 7-வது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில் உக்ரைனுக்கு அணு ஆயுதங்கள் வழங்க சில நாடுகள் முன்வந்துள்ளன.
இதனிடையே உக்ரைன் பிற நாடுகளிடமிருந்து அணு ஆயுதங்கள் வாங்குவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் இன்று இரவு பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.