அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 150 நாட்களை தாண்டியுள்ளது. இந்த போரில் உக்ரைன் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு தொடர்ந்து போராடி வந்தாலும், ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ளது. உக்ரைனில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்யா அந்த பகுதி மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை அளிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம் போரை மேலும் தீவிரமாக்கி சீக்கிரத்தில் முடிப்பதற்காக ரஷ்யா போரில் பல அதிநவீன ஏவுகணைகளையும் பயன்படுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நவீன ஏவுகணை கொண்டு மைக்கோலைவ் கப்பல் கட்டும் தளத்தில் நடத்திய தாக்குதலில் 350 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேபோல் தற்காலிக ராணுவ முகாம் ஒன்றில் நடத்திய தாக்குதலில் 70 வீரர்கள் பலியாகியுள்ளனர்.