மீண்டும் குலுங்கியது புகுஷிமா: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

செவ்வாய், 22 நவம்பர் 2016 (10:24 IST)
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 3 மணியளவில்) பூமியின் அடியில் 11.3 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என பதிவாகியுள்ளதாக ஜப்பானின் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.



சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, புகுஷிமா மற்றும் மியாகி பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புகுஷிமா அணு உலையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தால் சுமார் 5 பேர் லேசான காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த சுனாமி பேரலையால் புகுஷிமா அணுஉலையில் இருந்த மூன்று ‘ரியாக்டர்’கள் உருகி, சுமார் 18 ஆயிரம் பேர் இறந்தும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்