பாகிஸ்தான், இந்தியா இடையே நதிகளை பங்கிட்டு கொள்வதில் ஒரு ஒப்பந்தம் உள்ளது. இதில், இந்தியாவில் முழுமையாகப் பயன்படுத்தாத உபரி நீர் ஜீலம், சீனாப், ராபி, பியாஸ் மற்றும் சட்லெட்ஜ் ஆகிய 5 நதிகளின் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு பின் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, காஷ்மீரில் மூன்று அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுப்போம் என கூறியிருந்தார். இதில் பியாஸ் மற்றும் சட்லெட்ஜ் நதிகளின் நீரை யமுனை நதிக்கு திருப்பி விடுவதாகவும் கட்கரி கூறினார். இதை கேட்டு பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான ‘ஜமாத்-உத்-தாவா’வின் தலைவரான ஹபீஸ் சய்யீதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் சய்யீத் தனது பேச்சில், ‘நீ பாகிஸ்தானுக்கு வரும் நீரை நிறுத்துவாயா? காஷ்மீரில் அணைகட்டி நீரைத் தேக்குவாயா? அதை எங்களுக்கு இல்லாமல் செய்வாயா? எல்லை மீறி நீ பேசிவிட்டு அதற்கு நாம் பதிலளிக்காமல் மவுனம் காக்க வேண்டும் என விரும்புகிறாயா? நீ நீர்வரத்தை தடுத்தால் நீ மூச்சு விடுவதை நான் தடுப்பேன்’ எனக் கூறியுள்ளார்.
சய்யீதின் இந்த மிரட்டலினால் அவருக்கு பாகிஸ்தானியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடிவருகிறது. 26/11, குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது இவரும், இவரது இயக்கத்தினரும் தான். இந்த பயங்கரவாத இயக்கத்துக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு உள்ளது.