இனி ரத்த தானம் தேவையில்லையா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த செயற்கை ரத்தம்..!

Siva

வியாழன், 3 ஜூலை 2025 (14:02 IST)
மனிதர்களிடமிருந்து தானமாக பெறும் இரத்த வகைகளை போல அல்லாமல், அனைத்து வகை இரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிகவும் அவசரமான காலங்களில் உயிர்காக்கும் வகையில் செயற்கை இரத்தம் ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இது மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய வகை செயற்கை இரத்தம், எந்த ஒரு பிரிவு இரத்தத்துக்கும் பொருந்தும் என்பது இதன் தனிச்சிறப்பு. இந்தச் செயற்கை இரத்தம் தற்போது ஆய்வுக்கூடச் சோதனைகளில் உள்ளது. இது நடைமுறைக்கு வந்துவிட்டால், கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்தச் செயற்கை இரத்தம், மனிதர்களிடமிருந்து பெறப்படும் இரத்த தானத்திற்கு ஒரு முடிவாக அமையாது என்றும், மாறாக அதன் ஒரு துணையாகவே தொடரும் என்றும் கூறப்படுகிறது.
 
ஜப்பானின் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில், பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, செயற்கை இரத்தத்தை உருவாக்கி தீவிரமாக பரிசோதித்து வருகிறது.
 
இந்தச் செயற்கை இரத்த ஆராய்ச்சிக் குழு, ஆரோக்கியமாக இருக்கும் 16 தன்னார்வலர்களின் உடலில் 100 மி.லி. முதல் 400 மி.லி. வரை செயற்கை இரத்தம் செலுத்தி, அது எவ்வாறு செயல்படுகிறது, உள்ளுறுப்புகளை இயக்குகிறது என்று சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனை வெற்றியடைந்தால், வரும் 2030 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் மருத்துவமனைகளில் செயற்கை இரத்தத்தின் பயன்பாடு உறுதி செய்யப்படும். 

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்