மரியானா ட்ரென்ச்: மிக ஆழமான பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்ட பொருள்!!

செவ்வாய், 14 மே 2019 (14:03 IST)
உலக கடல் பரப்பில் மிக ஆழமான பகுதியாக அறியப்படும் மரியானா ட்ரென்ச் பகுதியின் இதுவரை யாரும் செல்லாத ஆழத்திற்கு சென்று புதிய சாதனை படைத்துள்ளார் விக்டர் வெஸ்கோவா என்னும் முன்னாள் கடற்படை அதிகாரி.
 
இந்த பள்ளத்தாக்கில் மனிதர்கள் இதுவரை பார்த்திராத பல்வேறு உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 1960ல் அமெரிக்க கப்பற்படை 35,800 அடி ஆழம் வரை சென்றதே இதுவரை சாதனையாக இருந்தது. 
 
ஆராய்ச்சி நிமித்தம் கடலுக்கடியில் 35,853 அடி (10,927 மீட்டர்) பயணம் செய்த விக்டர் தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார். கடலடி பாறைகளையும், மணலையும் பரிசோதனைக்காக கொண்டு வந்த விக்டர் அதில் வித்தியாசமான பொருளையும் பார்த்ததாக கூறியிருக்கிறார். 
நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பிளாஸ்டிக்தான் அந்த பொருள். கடல் பரப்பில் 100 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதர்களே செல்ல முடியாத பகுதிகளில் கூட பிளாஸ்டிக் கழிவுகள் பரவியிருப்பது சுற்றுசூழல் எவ்வளவு மோசமடைந்திருக்கிறது என்பதற்கான உதாரணம் என விக்டர் கூறியிருக்கிறார்.
 
விக்டரின் இந்த சாகசத்தையும் சேர்த்து இதுவரை மூன்று முறை மட்டுமே மரியானா அகழியில் மனிதர்கள் சென்றுள்ளனர். 2012ல் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த பகுதியில் 35,787அடி ஆழம் வரை பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்