திமிங்கல வேட்டையை வணிகமாக்கும் ஜப்பான்!

புதன், 26 டிசம்பர் 2018 (20:37 IST)
வணிக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடுவதை ஜூலை மாதம் முதல் தொடங்க இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. முன்னதாக வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை தடை செய்துள்ள சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தில் இருந்து ஜப்பான் வெளியேறியது.
 
திமிங்கிலங்களைப் பாதுகாப்பதே சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தின் நோக்கம். சில திமிங்கில இனங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழியும் நிலைக்கு வந்தவுடன், வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை 1986-ம் ஆண்டு தடை செய்தது இந்த ஆணையம்.
 
1951-ம் ஆண்டில் இருந்து ஜப்பான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்துவந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினரான ஜப்பான் அதிகாரி ஒருவர் திமிங்கிலங்களை உண்பது ஜப்பான் பண்பாட்டின் ஓர் பகுதி என்று தெரிவித்துள்ளார்.
 
பல ஆண்டுகளாக அறிவியல் ஆராய்ச்சிக்கு என்று திமிங்கிலங்களைப் பிடித்த ஜப்பான் அவற்றின் இறைச்சியை விற்றும்வந்தது. இந்த செயலை உயிரினப் பாதுகாவலர்கள் பரவலாக விமர்சித்துவந்தனர்.
 
வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிக்கப்போவதாக ஜப்பான் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு சில நாள்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதனால் மோசமான பின் விளைவுகள் இருக்கும் என்று சர்வதேச உயிரினப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்